அஸ்ஸாம்:அல்கொய்தாவுக்கு ஆட் சேர்ப்பு- மேலும் ஒரு மதராசா புல்டோசர் மூலம் இடிப்பு

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அல்கொய்தா கிளை அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான மேலும் ஒரு மதராசா புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் உ.பி, அஸ்ஸாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக செயல்படுவோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படுகிறது. பாஜக அரசுகளின் இந்த புல்டோசர் கலாசாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் புகலிடங்களாக உருமாற்றி வருகின்றன என உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்திருந்தன. அஸ்ஸா மாநில அரசும் இது தொடர்பான எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.

கடந்த மாதம் அஸ்ஸாமில் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த 11 பயங்கரவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஸ்ஸாம் மாநிலத்தில் வெவ்வேறு பெயர்களில் அல்கொய்தாவும் அதன் சார்பு இயக்கங்களும் செயல்பட்டு வருவதும் அம்பலமானது. மேலும் அண்மையில் அஸ்ஸாமின் கோல்பரா மாவட்டத்தில் மேலும் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் சிக்கினர். கோல்பரா மாவட்டத்தில் மசூதிகளின் இமாம்களாக இருந்த அப்துஸ் சுபான், ஜலாலுதீன் சேக் இருவருமே சிக்கிய பயங்கரவாதிகள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் மேலும் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் அஸ்ஸாமில் பதுங்கி இருந்த 37 பயங்கரவாதிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தின் அன்சருல் இஸ்லாம் பயங்கரவாத அமைப்பு, அல்கொய்தாவின் கிளை அமைப்பு என்கின்றன புலனாய்வு ஏஜென்சிகள். இந்த அமைப்பை சேர்ந்த முப்தி முஸ்தபா, அம்ருதின் அன்சாரி, மமுன் ரஷித் உள்ளிட்டோர்தான் அஸ்ஸாமில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அல்கொய்தா இயக்கத்துடன் இணைந்து தாக்குதல் சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளில் மதராசா எனப்படும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை நடத்திய மதகுருமார்களும் அடக்கம். இதனால் அஸ்ஸாமில் இத்தகைய மதராசாக்களை மாநில அரசு இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறது. ஏற்கனவே அஸ்ஸாமில் 2 மதராசாக்கள் இடிக்கப்பட்டன.

இந்நிலையில் Bongaigaon மாவட்டத்தில் இயங்கி வந்த Markazul Ma-Arif Quariayana மதராசாவும் தற்போது இடிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்குள்ளாகி இடிக்கப்படும் 3-வது மதராசா இது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.