மதுரை ரயில் நிலையம் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் இன்ஜின் தடம் புரண்ட விபத்து குறித்து மதுரைக்கோட்ட ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
நாள்தோறும் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை வழக்கம்போல 4.15மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக மதுரை கோட்ஸ் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ்சின் இன்ஜினை மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக இன்ஜினை நகர்த்தி செல்லும்போது இன்ஜின் தடம்புரண்டது.
இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் முன்பாக ரயில்வே பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு மாற்று இன்ஜினை பொறுத்திய பின் ரயில் தாமதமாக பின்னர் புறப்பட்டு சென்றது. இந்த விபத்து காரணமாக செகந்திராபாத், பழனி, தேனி சிறப்பு ரயில்கள் தாமதம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மதுரைக்கோட்ட ரயில்வே நிர்வாகம், “சென்னை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு மதுரையில் டீசல் இன்ஜின் மாற்றப்படுவது வழக்கம். அதுபோல இன்று அதிகாலை இன்ஜின் மாற்றம் நடைபெற்றது. அப்போது இந்த ரயிலில் இருந்து கழற்றப்பட்ட மின்சார இன்ஜின் பின்புறமாக பார்சல் ஆபிஸ் அருகே நிறுத்த சென்ற போது மூன்று சக்கரங்கள் தடம் புரண்டதாகவும், தடம் புரண்ட இன்ஜினை சரி செய்வதற்காக காலை 07.25 மணி முதல் 20 நிமிடத்திற்கு மின் பாதையில் உள்ள மின்சாரம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டது.
ரயில் இன்ஜின் தடம் புரண்டதால் திண்டுக்கல் மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் சிறிது காலதாமதமாக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் ஒரு மணி நேரமும், வைகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடமும், பழனி சிறப்பு ரயில் 9 நிமிடமும், தேனி சிறப்பு ரயில் 32 நிமிடங்களும் மதுரையிலிருந்து கால தாமதமாக புறப்பட்டது’ என தகவல் தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM