புதுடெல்லி: இந்து, புத்தம் மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்த தலித்களுக்கு வழங்கப்படும் எஸ்சி இட ஒதுக்கீட்டு சலுகைகளை பிற மதங்களுக்கு மாறிய தலித்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரும் பொதுநலன் மனு மற்றும் கிறிஸ்துவ தலித்களுக்கும் எஸ்சி இட ஒதுக்கீட்டு சலுகைகளை வழங்க கோரும் மனு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்கே கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இட ஒதுக்கீடு சலுகைகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் இது பற்றி தெளிவாக எடுத்து கூறியதாக தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்துகள், புத்த மத்தினர், சீக்கியர்களுக்கு எஸ்சி இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் அதே சலுகைகளை கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மதம் மாறிய தலித்களுக்கும் வழங்குவது குறித்த ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க 3 வார அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.