கிலோ 1,800 ரூபாய்! கடும் விலையேற்றம் கண்ட மதுரை மல்லிகை

Madurai Malligai Price: விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்கள் என்பதால் மதுரை மல்லிகை ஒரு கிலோ ரூபாய் 1,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களான திண்டுக்கல் விருதுநகர் சிவகங்கை ராமநாதபுரம் தேனியிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

தனிச்சிறப்பு மிக்க மதுரை மல்லிகை நாள்தோறும் சராசரியாக 50 டன்னுக்கு மேலாக இங்கு விற்பனை செய்யப்படுகிறது. மணம், தன்மை காரணமாக மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு உள்ளதால் மதுரையில் இருந்து விமானம் மூலமாக சிங்கப்பூர் மலேசியா துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தி என்பதாலும், நாளை முகூர்த்த நாள் என்பதாலும் மதுரை மல்லிகையின் விலை மிகக் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ ரூபாய் 1,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பிற பூக்களின் விலை நிலவரம் பின்வருமாறு: 

சம்பங்கி – ரூ.250 
செவ்வந்தி – ரூ.250
பட்டன் ரோஸ் – ரூ.200 
செண்டு மல்லி  – ரூ.80 
பிச்சி – ரூ.1,000 
முல்லை – ரூ.1,000

மதுரை மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், அனைத்து பூக்களின் விலையும் கடுமையான விலையேற்றம் கண்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக இந்த விலை நிலவரம் ஓரிருநாள் நீடிக்கும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.