பொதுவாக இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியாசக்தி ஆகிய மூன்று சக்திகளின் இருப்பிடமாகப் போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். இவற்றைக் குறிக்கும் வகையில் மும்முக விநாயகராக இப்பெருமானைப் போற்றுதல் வழக்கமாக உள்ளது. அதிலும் விநாயகர் சதுர்த்தி நாளான இன்று (31.8.2022) மும்முக விநாயகரை தரிசித்தல் மிகவும் சிறப்பானதாகும்
அத்தகைய மும்முக விநாயகர் சந்நிதி மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் பழைமை வாய்ந்த ஸ்ரீசோமநாதர் ஆலயத்தில் அமைந்திருக்கிறது. இங்கு மூன்று கணபதிகளையும் ஒரே சந்நிதியில் தரிசிக்கலாம். மிகப்பழையர், மிகப்பெரியர், மிகப்புனிதர் என்ற பெயர்களில் விநாயகர் விளங்கிடுவது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். மும்மூர்த்திகளின் ஒருங்கிணைந்த அம்சமாக போற்றப்படும் விநாயகரின் வலது புறத்தில் அங்குசம், அட்சமாலை, வரதம் காட்சியளிக்கும். இடப்புறத்தில் பாசம், அமிர்தகலசம், அபயம் இவற்றைத் தாங்கிப் புரசம் பூ போன்ற சிவந்த நிறத்தினராய் பொற்றாமரை ஆசனத்தில் எழுந்தருளியுள்ளார்.
அ, இ, உ ஆகிய மூன்று பிரணவத்தின் அங்கங்களின் ஒருமித்த வடிவமாகத் திகழும் இப்பெருமான் ‘மூவெழுத்து கணபதி’ எனப்படுகிறார். வணங்கிடுபவரின் கடந்த காலத் துன்பங்களைப் போக்கிடவும், நிகழ்காலத்தில் நன்மைகளைப் பெருக்கிடவும்; எதிர்காலத்தில் மேன்மைகளை நிலைத்திடவும் இந்த மும்மூர்த்தி விநாயகர் அருளுகிறார்.
இத்தகு பெருமை வாய்ந்த மும்முக விநாயகரை ,இன்றைய நாளில் வணங்கி வளம் பெறலாமே !