ராஞ்சி: ஜார்க்கண்டில் செய்முறைத் தேர்வில் 11 மாணவர்கள் தோல்வியடைய செய்ததால், ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து மாணவர்கள் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலுக்கு பின் பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள சூழலில், மாணவர்களின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள் மீதான தாக்குதல், மாணவர்களின் மனநிலையில் மாற்றம், மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள், மாணவர்களின் தற்கொலை என பல்வேறு பிரச்னைகள் அதிகரித்து வருகிறது.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இந்த பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. அதற்கு உதாரணமாக இன்னொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள கோபிகந்தர் கிராமத்தில், பழங்குடி மாணவர்களுக்கான அரசு உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 200 பேர் தங்கிப் படிக்கின்றனர். சமீபத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு முடிவுகள் வெளியாகியது.
மரத்தில் கட்டிவைத்து தாக்குதல்
இதில் 11 மாணவர்களுக்கு 32 மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தேர்ச்சிபெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், பள்ளியின் கணித ஆசிரியரான சுமன் குமார் மற்றும் பள்ளி அலுவலர் சோனேராம் சவுரே ஆகியோரை பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இவர்களோடு இணைந்து மற்ற மாணவர்களும் இனைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புகாரளிக்காத ஆசிரியர்
இந்த சம்பவம் அறிந்து பள்ளி வளாகத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களின் நலன் கருதி புகார் கொடுக்க விரும்பவில்லை என ஆசிரியர் சுமன் குமார் கூறியுள்ளார்.
ஆசிரியர்களுக்கு இடையிலான போட்டி?
கணித ஆசிரியரான சுமன் குமார், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர். ஆனால் சில காரணங்களால் அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த சம்பவத்திற்கு ஆசிரியர்கள் இடையிலான போட்டியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பள்ளிக்கு விடுமுறை
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியில் கல்வி பயின்று வரும் 9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும், வதிந்தியை நம்பி மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.