கின்னஸ் உலக சாதனை (GWR) உலகில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகள், வினோதமான தருணங்களையும், அரிய செயல்கள் செய்யும் மனிதர்கள் உட்பட பலரையும் சாதனை புத்தகத்தில் சேர்த்து பெருமைப்படுத்தி வருகிறது.
உலகிலேயே மிகப்பெரிய சிக்கன் நக்கெட் தயாரிக்கும் சமையல் கலைஞர்கள் முதல் 3 நிமிடங்களில் அதிக ஜாம் டோனட்களை சாப்பிட்ட பெண் வரை மனிதர்களின் சிறந்த திறமைகளை அங்கீகரிக்கும் விதமாக பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் `கின்னஸ் உலக சாதனை’ எனும் கௌரவம் வழங்கப்பட்டு வருகிறது.
உயிர் வாழ்வதற்கு உணவு முக்கியமானது, அதுவே நமக்கு அடிப்படை வாழ்வாதாரமாகிறது. அத்தகைய உணவு உற்பத்தியில் தங்களின் உணர்ச்சிகளை படைப்பாற்றலாக வெளிப்படுத்துவதை இப்போது பார்க்க முடிகிறது.
சமீபத்தில் உணவைக் கொண்டு தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான மற்றுமொரு உலகசாதனை படைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சௌதம்டன்(Southampton) பகுதியில் வசிப்பவர் செபாஸ்டின் சுஸ்கி. விவசாயியான இவர் தனது வீடு தோட்டத்தில் உலகின் மிக நீளமான வெள்ளரிக்காயை விளைவித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த நீளமான வெள்ளிரிக்காய் குகுமிஸ் சாடிவஸ்(Cucumis Sativas) -ன் ஒரு மாதிரியாகும். இங்கிலாந்தில் ஏற்பட்ட வெப்ப அலைகள் பண்ணைகளின் விளைப்பொருட்களில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வந்த நிலையில், வெற்றிகரமாக செபாஸ்டின் தனது தோட்டத்தில் நீண்ட வெள்ளரிக்காய் ஒன்றை விளைவித்து சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக 6.2 சென்டிமீட்டர் நீளம்வரை வளர்க்கப்பட்ட வெள்ளரிக்காய் கின்னஸ் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்ட நிலையில், செபாஸ்டின் தனது தோட்டத்தில் 113.4 சென்டிமீட்டர் நீளத்திற்கு நீண்ட வெள்ளரிக்காயை வளர்த்து முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார். இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த வெள்ளரிக்காயை போல பல காய்கறிகளும் அதிக நீளமாக விளைவிக்கப்பட்டு உலக சாதனையில் இடம் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஜெயிண்ட் வெஜிடபிள் சாம்பியன்ஷிப்-ல் பல காய்கறிகள் தனித்துவமான அளவுகளின் காரணமாக முக்கிய இடத்தை பிடித்தன. இந்த நிகழ்வில் 3.12 கிலோ எடைகொண்ட கத்திரிக்காய் அதிக எடைகொண்ட கத்திரிக்காய் என்ற சாதனையையும், மேலும் 136 சென்டிமீட்டர் நீளம் கொண்ட லீக் (Leek) உலகின் நீளமாக வளர்க்கப்பட்ட லீக்(Leek) என்ற பட்டத்தை தட்டி சென்றது. அந்த லீக்(Leek) காய்கறி ரோலர்கோஸ்டர்களில் கொண்டு செல்லும் அளவிற்கு உயரமானதாகும்.