சண்டிகர்: கட்சி விரோத செயல்களில் ஈடுபடும் அமரீந்தர் சிங் மனைவி பிரனீத் கவுரை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார். சமீபத்தில் நடந்த பஞ்சாப் பேரவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைத்து அமரீந்தர் சிங்கின் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் அமரீந்தர் சிங்கும் தோற்றார். இவரது மனைவி பிரனீத் கவுர், தற்போது காங்கிரஸ் எம்பியாக உள்ளார். கணவர் தனியாக கட்சி தொடங்கி காங்கிரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வரும்நிலையில், அவரது மனைவி காங்கிரசில் தொடர்வது மாநில அளவில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் நேற்று சண்டிகரில் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் ராஜா வாரிங் தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பஞ்சாப் நாடாளுமன்ற உறுப்பினரும், அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரனீத் கவுர், கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவதால் அவர் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் பிரனீத் கவுரை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கினாலும் கூட, அவரது எம்பி பதவிக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து எம்பி பிரனீத் கவுர் கூறுகையில், ‘எனக்கு எதிராக பஞ்சாப் மாநில தலைவர் அமரீந்தர் ராஜா வாரிங்க்கு அதிகாரம் இல்லை. எம்பியாக எனது பணிகளை செய்து வருகிறேன். இதுதொடர்பாக கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்க முடியும்’ என்று கூறினார்.