பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில் புதிய பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை; உள் நோக்கம் என்ன ?

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்‌ நிறுவனத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடி பகுதியில் புதிய பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை‌ கட்டுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ளதாக அந்நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

CPCL | பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை‌

நாகையில் 0.5 மில்லியன் டன் திறனுடைய பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை 1993 -ல் தொடங்கப்பட்டு பின்னர் 1 மில்லியன் டன் திறனுடைய சுத்திகரிப்பு ஆலையாக மேம்படுத்த‌பட்டு இயங்கி வருகிறது. இயக்கத்தில் இருக்கும் சுத்திகரிப்பு ஆலையை அகற்றிவிட்டு அதே இடத்தில் 9 மில்லியன் டன் திறனுடைய புதிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவ சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் திட்டமிட்டது. அதன் திட்ட மதிப்பு சுமார் 31,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டது.

புதிய சுத்திகரிப்பு ஆலைக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 17, 2021 அன்று நாட்டினார். ஆலை கட்டுமானத்திற்காக 606 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தை சுற்றியுள்ள 40 கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சுத்திகரிப்பு ஆலையை நிறுவும் வேலையை விரைவில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதியை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நாகப்பட்டினம் மாவட்டமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தா.செயராமன்.

இது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைவர் தா.செயராமனிடம் பேசினோம். அவர் பல திடுக்கிடும் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். “முதற்கட்டமாக இந்த சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமான பணிகள் முடிவடைந்த பிறகு ஆலை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார். 9 மில்லியன் டன் திறனுடைய சுத்திகரிப்பு ஆலை கட்டப்பட்ட பின் அதை 15 மில்லியன் டன் திறனுடைய ஆலையாக விரிவாக்கம் செய்யும் திட்டமும் சி.பி.சி.எல்-லிடம் உள்ளது.

“9 மில்லியன் டன் திறனுடைய சுத்திகரிப்பு ஆலைக்கான கச்சா எண்ணெய் எங்கிருந்து வரும்? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தினால் காவேரி படுகையில் நிலத்தில் கிணறுகள் அமைக்க முடியாத நிலை உள்ளது. அதனையும் மீறி ஏற்கனவே இருக்கும் கிணறுகளின் வளாகத்தில் புது கிணறுகளை அமைக்கும் சட்ட விரோத சதிச்செயலில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே கடலில் எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்நிறுவனங்கள் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை குறிப்பாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் 11,500 சதுர‌ கிலோ மீட்டர் பரப்பளவில் கிணறுகளை அமைக்கும் திட்டத்தில் உள்ளன. அங்கு எடுக்கப்படும் கச்சா எண்ணையை நாகையில் அமைய இருக்கும் சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிக்கும் திட்டம் இருக்கலாம்.

பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை‌

புதிய சுத்திகரிப்பு ஆலை அமைவதை தடுத்து நிறுத்தினால் கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டத்தை தவிர்க்க முடியும். அப்படி கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் ஒன்பது லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும், கடல் உயிரினங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். ஏற்கனவே இயங்கி வரும் சி.பி.சி.எல் -க்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலையால் அப்பகுதி பாலாகி விட்டது மற்றும் அங்குள்ள ஏரிகள் வறண்டு விட்டதாகவும், விவசாயம் முழுமையும் போய்விட்டதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சு திணறல், தோல் நோய்கள் போன்ற நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்பகுதியில் சுத்திகரிப்பு ஆலையால் மக்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை கண்டறிய தமிழக அரசு மருத்துவ குழுவை அமைக்க வேண்டும்” என்று சொல்லி முடித்தார்.

சுத்திகரிப்பு ஆலை குறித்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், புதிய சுத்திகரிப்பு ஆலை குறித்த சில தகவல்களை கேட்கவும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தோம். அந்நிறுவனத்தின் பி.ஆர்.ஓ வெளியில் சென்றுள்ளார், வேலையாக உள்ளார், கூட்டத்தில் உள்ளார் பிறகு தொடர்பு கொள்ளவும் என்ற பதில்கள்தான் நமக்கு கிடைத்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.