சூரத்: பள்ளி மாணவியை கடந்த சில மாதங்களாக மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளே இந்தக் கொடுமைகளுக்கு பெருமளவில் இரையாகின்றனர். உறவினர்களால், ஆசிரியர்களால், அண்டை வீட்டுக்காரர்களால், ஏன் சில சமயங்களில் பெற்ற தந்தையால் கூட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.
அதுபோன்ற ஒரு கொடூர சம்பவம்தான் டையு டாமன் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. குஜராத் அருகே டையு டாமனில் உள்ள சில்வசா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவி ஒருவர் கடந்த வாரம் மும்பையில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இரவு நேரங்களில் தூக்கத்தில் அவர் பயந்து நடுங்குவதை அவரது அத்தை பார்த்துள்ளார். இதுகுறித்து மாணவியிடம் அவர் கேட்டுள்ளார். இதற்கு முதலில் மழுப்பலாக பதிலளித்த மாணவி பின்னர் உண்மையை கூறியுள்ளார்.
அதாவது, அவரது பள்ளி தலைமை ஆசிரியரும், ஆங்கில ஆசிரியரும் சேர்ந்து தன்னை மிரட்டி 6 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக மாணவி கூறியுள்ளார். மேலும், இதனை யாரிடமாவது கூறினால் உனது பெற்றோரை கொலை செய்து விடுவோம் எனவும் அவர்கள் மாணவியை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த மாணவி, தனக்கு நடக்கும் கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் அத்தை இதுதொடர்பாக மும்பை போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து பின்னர் டையு டாமன் போலீஸாருக்கு அது மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய டையு டாமன் போலீஸார், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் கிளாடியோ நூனஸ் (57) மற்றும் ஆங்கில ஆசிரியர் லெஸ்டர் டி கோஸ்டா (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான போக்சோ சட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்தது. இருந்தபோதிலும், பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. குழந்தைகள் மற்றும் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்றினால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.