*அரசு அனுமதிக்கு மாநகராட்சி அறிக்கை
சேலம் : சேலத்தில் மூக்கனேரி உள்பட 3 ஏரிகளை மறுசீரமைப்பதற்கு ₹52 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிர்வாக இயக்குனர் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில், ஏரிகளை சீரமைப்பதற்கும், நீர் ஆதாரத்தை பெருக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, சேலம் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, கடந்த 1911ம் ஆண்டு பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இந்த ஏரி உள்ளது. நீரின்றி காணப்படும் இந்த ஏரியை சீரமைத்து, சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், ஏரி மறுசீரமைப்பு பணிக்கு ₹498 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து ஏரியில் புதர்மண்டி காணப்படும் கருவேல மரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஏரிக்கு மேட்டூர் அணையின் உபரி நீரை கொண்டு வருதற்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுவும் மேட்டூரில் இருந்து தனிக்குழாய் அமைத்து, பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், சேலத்தில் மூக்கனேரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி ஆகிய 3 ஏரிகளை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் தொடங்கியது. இதற்காக மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரியை மேம்படுத்த பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் திட்ட அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், போடிநாயக்கன்பட்டி ஏரியை சீரமைக்க சென்னை சேர்ந்த தனியார் நிறுவனம் திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. அதன்படி, ஏரியின் கரையை வலுப்படுத்துதல், பூங்கா அமைத்தல், பறவைகள் வந்து செல்ல மண் திட்டு அமைத்தல், கழிவுநீர் செல்ல தனி பாதை அமைத்தல், நீர் வழித்தடம் அமைத்தல், சிறுவர்கள் விளையாட்டு உபகரணம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக 20.26 ஏக்கரில் உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரி மறு சீரமைப்பு, அபிவிருத்தி பணிக்கு ₹19 கோடியும், 86 ஏக்கரில் அமைந்துள்ள மூக்கனேரியை மறுசீரமைப்பு பணிக்கு ₹23 கோடியும், 23.65 ஏக்கரில் அமைந்துள்ள அல்லிக்குட்டை ஏரி அபிவிருத்தி பணிக்கு ₹10 கோடியும் என 3 ஏரிகளையும் மறு சீரமைக்கும் பணிக்கு ₹52 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன், 3 ஏரிகளிலும் மறு சீரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குமரகிரி ஏரி, பள்ளப்பட்டி ஏரிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மூக்கனேரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரிகளை சீரமைத்து மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ₹52 கோடியில் 3 திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது நிர்வாக அனுமதிக்காக சென்னை நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்றவுடன் பணிகள் விரைவில் தொடங்கும். இந்த மறுசீரமைப்பு பணிகளால் 3 ஏரிகளும் புதுப்பொலிவு பெறும்,’’ என்றனர்.