மும்பை அருகிலுள்ள உல்லாஸ் நகரில் சுவாமி தமராம் சாஹிப் தர்பார் கோயில் வளாகத்தில் அதன் பூசாரி ஜாக்கி ஜெசியாசி தன் குடும்பத்தோடு தங்கியிருக்கிறார். கோயில் நகைகள் அனைத்தும் பூசாரி தங்கியிருந்த வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கோயிலுக்குள் அதிகாலை ஐந்து மணிக்கு ஆறு பேர் வால், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர். வீட்டுக்குள் நுழைந்தவுடன் வீட்டிலிருந்த ஆண் உறுப்பினர்களை அடித்து உதைத்து கட்டிப்போட்டனர். பின்னர் பெண்களையும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டினர்.
பின்னர், அவர்கள் வீட்டிலிருந்த பீரோ உட்பட அனைத்து இடங்களிலும் தேடி ரூ.40 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூபாய் 80,000 ரொக்கத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து பூசாரி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய கோயில் பூசாரி மகன் சீராக், “ஆறு பேர் வீட்டின் முன் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து எங்களை அடித்து உதைத்தனர்.
சத்தம் கேட்டு எங்களது அறையிலிருந்து வந்து பார்த்த போது என் தந்தையை அடித்து கட்டிப்போட்டனர். என்னையும் அவர்கள் அடித்து கட்டிப்போட்டனர். என் சகோதரி, தாயாரை அவர்கள் ஆயுதங்களைக் காட்டி மிரட்டினர். கூட்டத்திலிருந்த ஒருவன் மற்ற 5 பேருக்கு உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருந்தான். தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்தப் பிறகு கண்காணிப்பு கேமரா, டிஜிட்டல் ரெக்கார்டர் எங்கிருக்கிறது என்று கேட்டனர்” என்று தெரிவித்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சஞ்சய் கெய்க்வாட் கூறுகையில், “கொள்ளையர்கள் தாக்கியதில் ஒருவர் காயமடைந்திருக்கிறார். மற்றவர்களை அதிகமாக அடித்து உதைத்திருக்கின்றனர்.”