புதுடில்லி: எனக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை வைத்து பா.ஜ., அரசியல் செய்வதாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டம் ராலேகன் சித்தியில் வசித்து வரும் காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராக, 2011ல் பெரிய போராட்டத்தை நடத்தினார். அது, நாடு முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.அப்போது அவருடன் இணைந்து செயல்பட்டவர், அரவிந்த் கெஜ்ரிவால்.
அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அன்னா ஹசாரே கூறியுள்ளதாவது:நீங்கள் முதல்வரானப் பிறகு முதன்முறையாக உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். புதுடில்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை, அதிக மது விற்பனை மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. நீங்கள் எழுதிய, ‘ஸ்வராஜ்’ நுாலில், மது விற்பனையை எதிர்த்து கருத்து தெரிவித்தீர்கள்.ஆனால், தற்போது அதற்கு எதிராக செயல்படுகிறீர்கள். முதல்வரான பிறகு, கொள்கைகளை, கோட்பாடுகளை துறந்துவிட்டதாக தெரிகிறது. பதவி, அதிகார போதையில் நீங்கள் மூழ்கியிருப்பதாக தெரிகிறது. இது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் அளித்த பதில்: மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ., கூறி வருகிறது. ஆனால், ஊழல் நடக்கவில்லை என சி.பி.ஐ., கூறியுள்ளது. பா.ஜ.,வின் புகாரை நம்ப மக்கள் தயாராக இல்லை. தற்போது, என்னை விமர்சிப்பதற்காக, அன்னா ஹசாரேவை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறது. இது அரசியலில் சாதாரணம்.
நாங்கள் பொது வாழ்க்கைக்கு வந்த போது, எந்த விசாரணைக்கும் தயார் எனக்கூறினோம். சிபிஐ தனது விசாரணையை முடித்து விட்டது. மணிஷ் சிசோடியாவிடம் 14 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது . அனைத்து கேள்விகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் மணிஷ் சிசோடியா பதில் கூறினார். அவரின் லாக்கரில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது மறைமுகமாக நற்சான்றிதழ் தான். சிபிஐ விசாரணையில் எதுவும் கிடைக்காததால் பா.ஜ.,வால் அரசியல் செய்ய முடியாது. தற்போது, எங்களது கட்சி எம்.எல்.ஏ.,க்களை 20 கோடி கொடுத்து வாங்க முன்வந்தது குறித்து பா.ஜ., விசாரணை நடத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement