வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ஒரு பவுன் என்ன விலை? இந்த கேள்விக்கு உங்களில் யாரேனுக்கும் விடை தெரியுமா? இப்ப சொல்ல வேண்டாம். நான் அப்புறம் கேட்கிறேன் சொல்லுங்க.. இப்ப நம்ம அந்த சிறிய நகை கடையில் ஒரு பவுன் செயின் வாங்கி அதை ஆவலோடு தன் கழுத்தில் அணிந்து கொண்டு வரும் பாட்டியை பின்தொடர்வோம்… அன்னபூரணி என்பதை விட பனியார பாட்டி என்றால் அந்த சிறிய ஊரில் அனைவருக்கும் தெரியும்.
திருமணமாகி அந்த ஊருக்கு அவர் வரும்போது 18 வயது, அவரைபோலவே அவர கணவரும் யாருமற்றவர் ,சிறிய ஓட்டு வீடு,கணவரின் சொற்ப வருமானம் ஆனால் மகிழ்வான வாழ்க்கை அதன் பலனாய் நாட்கள் தள்ளி போக, அந்த சந்தோசத்தை கணவரிடம் சொல்ல காத்திருக்கையில், அவனோ விபத்தில் சிக்கி சடலமாக வாசலில் இறக்கி வைக்கப்பட்டான். பல நாட்கள் நிலைகுலைந்து கிடந்த அவளை மீட்டெடுத்தது வயிற்றில் இருந்த கருவும்,பனியாரமும் தான்..
சடலம் கிடந்த அதே இடத்தில் சிறிய விறகு அடுப்பு, ஒரு பனியார சட்டியோடு கடை போட்டவர் இந்த 63 வயது வரை அவரின் உலகம் அந்த பனியாரசட்டி தான். இத்தனை நாட்களில் அவர் கடை போடாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.பேறுகால வலி துவங்கியதும் அந்த சட்டியின் முன்தான். பிள்ளை பெற்று 3ம் நாள் பச்சை குழந்தையுடன் அவர் பனியாரசட்டியின் முன் அமர்ந்தபோது ஊரே அவரின் வைராக்கியத்தை கண்டு வியந்தது…
நகை கடையில் இருந்து நேராக வீட்டுக்கு வந்ததும் கடையை துவங்கினார் அன்னபூரணி. வழக்கமான வேலைகள் ஆனால் மனம் ஆகாயத்துக்கும் பூமிக்கும் துள்ளி குதித்தது.. இடையிடையில் கழுத்தில் மின்னும் செயினை வாஞ்சையோடு தடவி கொடுத்துக்கொண்டே அன்றைய வேலையை முடித்து கொண்டு கதவை சாத்திவிட்டு தலையணைக்கடியில் இருந்து அந்த கடிதத்தை எடுத்து பார்த்து கொண்டே கண்களை மூடினார். மனம் கடித்தில் இருந்த வரிகளை (அனேகமாக இது ஆயிரமாய் முறையாக இருக்கலாம்) சலைக்காமல் அசை போட்டபடியே மகிழ்ச்சி கடலில் மூழ்கியது.
அன்புள்ள அம்மாவுக்கு, உன் பாலு எழுதுவது. நல்லா இருக்கியாம்மா? என்னை மன்னிச்சிரும்மா,உன்னை விட்டு நான் வந்து 25 வருசத்துல இது தான் நான் போடுற முதல் கடிதம்.என்னை ஆளாக்க நீ பட்ட கஸ்டம் நம்ம ஊருக்கே தெரியும். நானும் வேலையில் சேர்ந்து உன்னை ராணி மாதிரி பார்த்துக்கணும்தான் நினைச்சேன்.. ஆனால் எங்கூட படிச்ச சாய்ராபானு, அவுங்க வீட்ல எங்க காதல் விசயம் தெரிஞ்சு பிரச்சனையாக என்னை நம்பி வீட்டைவிட்டு வந்துட்டா.. ஊருக்கும் அவ குடும்பத்துக்கும் பயந்து உன் கிட்ட கூடசொல்லாம ஒடி போயிட்டோம். உனக்கு கடிதம் எழுதவும் பயம், நாங்க இருக்கிற இடம் தெரிஞ்சுடும்னு.. சத்தியமா என்னால நீ செத்துப் போயிருப்பேன்ணு இவ்வளவு நாள் நினைச்சுதான் ஊர்பக்கமே வரலை…
யூடியூப்ல உன்னை பத்தி வந்த பனியார பாட்டி வீடியோவ பாத்த பின்னாடி தான் நான் வருவேன்னு நீ காத்துகிடக்கிறது தெரியும்.. நீ தெய்வம்மா…வர தீபாவளிக்கு நான், சாய்ரா உன் பேத்தி பூர்ணாவோட வரோம்… உன் பேத்திக்கு கல்யாணம் முடிவாகியிருக்கு, விபரம் நேர்ல சொல்றேன். இனி உன்னை விட்டு பிரியமாட்டேன்… பாலசந்தர்.
என்னை விட்டு போனாலும், தன்னை நம்பி வந்த புள்ளையை கைவிடாத என் பையன், அவனுக்காக தன் குடும்பத்தவிட்டு வந்த என் மருமக இருவரும் வரத நினைச்சு பாக்குறப்ப இவ்வளவு நாள் பட்ட கஸ்டம் எல்லாம் போச்சு… என் பேத்தி எப்படி இருப்பா??? என் தங்கம் இந்த பாட்டினால உனக்கு குடுக்க முடிஞ்சது இந்த செயின் மட்டும் தாண்டி… இன்னும் 2 நாள் தாண்டிட்டா தீபாவளி.. நினைக்கையில் கண்களின் ஓரம் கண்ணீர் கசிய துடைக்க முயலும்போது பின்புறம் ஏதோ சத்தம் கேட்டு திரும்பும் முன்…தலையில் கணமாக ஏதோ ஒன்று தாக்க….
மறுநாள் பேப்பரில் … ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி தலையில் கல்லை போட்டு படுகொலை என செய்தி வெளியாகி இருந்தது.. இது நாம் வழக்கமாய் கடந்து செல்லும் செய்தி தான். சரி இப்ப சொல்லுங்க .. ஒரு பவுன் என்ன விலை???
-இரா.இதயச்சந்திரன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.