புதுடில்லி: தன் மீது மிகவும் அவதூறு மற்றும் பொய்யான ஊழல் புகாரை கூறியதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் அடிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட அக்கட்சி தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க டில்லி கவர்னர் சக்சேனா முடிவு செய்துள்ளார்.
கடந்த 2016ல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது காதி மற்றும் கிராமப்புற தொழில் கமிஷனின் தலைவராக இருந்த துணை நிலை கவர்னர் சக்சேனா, 1,400 கோடி ரூபாய் பணத்தை மாற்றியுள்ளார் என ஆம் ஆத்மியின் அடிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக டில்லி கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: இது அவர்களின் கற்பனையின் உருவம். ஆம் ஆத்மி தலைவர்களால் செய்யப்பட்ட இந்த அப்பட்டமான தவறான, அவதூறான மற்றும் திசைதிருப்பும் குற்றச்சாட்டுகளை கவர்னர் தீவிரமாக எடுத்துள்ளார். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார். ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிக்கப்பட்ட போது , காதி மற்றும் கிராமப்புற தொழில் கமிஷன் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாக தகவல் வெளியான உடன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் ரூ.17,07,000 அளவுக்கு பழைய நோட்டுகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அதில் 2 பேருக்கு முக்கிய பங்கு உள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆம் ஆத்மி பொய்யாக கூறும் விஷயம் ரூ.17.07 லட்சம் பற்றியது. ரூ.1,400 கோடி அல்ல. இது அவர்களின் வெறும் கற்பனையின்றி வேறு இல்லை. இதற்காக வழக்கமாக பொய் சொல்பவர்கள், விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், இது குறித்து சுதந்திரமான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தற்போது இந்த வழக்கை நடத்தும் விதமானது, இயற்கை நீதிக்கு மாறாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement