​வலைவிரிக்கும் பாஜக… சிக்குவாரா திமுக எம்பி?

குஷ்புவாக இருந்தாலும் சரி… டாக்டர் சரவணனாக இருந்தாலும் சரி… வேறு கட்சியில் இருந்து வந்து பாஜகவில் இணைபவர்களுக்கு ராஜ மரியாதைதான். இப்படி ராஜ மரியாதை கொடுத்து வேற்று கட்சிகளில் லோக்கல் வெயிட்டாக உள்ள நபர்களை தட்டித் தூக்குவதில் பாஜகவை அடிச்சிக்க ஆளே இல்லை என்று சொல்லலாம்.

இதற்கு திமுகவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, ஜெயலலிதாவின் விசுவாசியாக அறியப்பட்ட நயினார் நாகேந்திரன் ஆகிய இருவர்தான் ஆகச் சிறந்த உதாரணங்கள். இவர்களின் வரிசையில் தற்போது திமுகவின் லோக்கல் வெயிட்டான எம்பி ஒருவரை தங்கள் பக்கம் வளைத்து போடும் நோக்கில் தமிழக பாஜக காய்களை நகர்த்த தொடங்கி உள்ளதாக தெரிகிறது.

பாஜகவுக்கு இந்த எண்ணம் எழுந்துள்ளதற்கு ,சேலம் தொகுதி திமுக எம்பியான எஸ்.ஆர். பார்த்திபன் அண்மையில் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவே பிள்ளைசுழியாக அமைந்துள்ளது.

‘சேலம் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் அரசு நிகழ்ச்சிகளுக்கு தொகுதி எம்பி என்ற முறையில்கூட மாநகராட்சி ஆணையர் தமக்கு அழைப்பு விடுப்பதில்லை. அவரது எச்சரிக்கையையும் மீறி தனக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்’ என்று எம்பி பார்த்திபன் அண்மையில் வெளியிட்ட பதிவு சேலம் திமுகவில் பரபரப்பை பற்ற வைத்தது.

திமுக எம்எல்ஏவான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் உடனான உட்கட்சி பூசலே, திமுக எம்பி பார்த்திபனின் இந்த மனகுமுறலுக்கு காரணம் என தெரியவரவே, என்னப்பா இதெல்லாம் என்று சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு கேட்க, அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணேன்னு கூலாக கூறி உள்ளார் எம்எல்ஏ ராஜேந்திரன்.

விஷயத்தை கேள்வி பட்டதும் சூடான திமுக தலைவர் ஸ்டாலின், எம்பி, எம்எல்ஏ, அரசு அதிகாரிகள் என எல்லோருக்கு ஒரு ரவுண்ட் ஃபோனை போட்டு, தன் பாணியில் பேசியுள்ளார். முதல்வர் தன்னிடம் பேசி முடித்த கையோடு, மாநகராட்சி கமிஷனருக்கு எதிரான தமது ட்விட்டர் பதிவை நீக்கிய எம்பி பார்த்திபன், இனி எல்லாம் நலமே… எனும்படி சமரச ட்விட்டர் பதிவை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

சரி இத்துடன் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது என் சேலம் மாவட்ட திமுக எம்பிக்கள் ரிலாக்ஸ் ஆகியிருந்த நிலையில், மீண்டும் அவர்களை டென்ஷன் ஆக்கும் விதத்தில் ட்விட்டர் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் பாஜக மாநில தகவல் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் நிர்மல் குமார்.

‘சட்டுபுட்டுனு ஒரு நல்ல முடிவை எடுங்க @SR_Parthiban…விரைவில் தேசப்பணி சிறக்க வாழ்த்துக்கள் !’ என்று நிர்மல் குமாரின் இந்த ட்விட்டர் பதிவு, திமுக உட்கட்சி பூசலை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு சமாதானம் செய்த பிறகும், பார்த்திபன் கட்சி மாறும் எண்ணத்தில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி உள்ளது.

பாஜகவால் தமக்கு ஏற்பட்டுள்ள இந்த சங்கடத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், ‘சூரியனைப் பார்த்து நாய்கள் குலைத்துக் கொண்டே இருக்கிறது. வதந்திகளுக்கு இதுவே என் பதில்’ என்று ட்வீட் செய்துள்ளார் பார்த்திபன்.

என்னதான் இருந்தாலும் இவர் தேமுதிகவில் இருந்து திமுகவுக்கு வந்து எம்பி ஆனவர் என்பதையும் கட்சி தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் விவரமறிந்த சில உடன்பிறப்புகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.