மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால் ஆசிரியர்கள் அவர்களை தண்டிப்பது குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் குறைவான மதிப்பெண்கள் கொடுத்த ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தும்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருக்கும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மதிப்பெண்களைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிகமான மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்திருந்தனர்.
செயல்முறை தேர்வு மதிப்பெண்களை சேர்க்கவில்லை என்று தெரிகிறது. மதிப்பெண்களை பார்த்த மாணவர்கள் உடனே அது குறித்து பேச வருமாறு ஆசிரியர்களை அழைத்தனர். பின்னர் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களை அங்கு இருந்த மரத்தில் கட்டிவைத்து மாணவர்கள் அடித்து உதைத்தனர். பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களை சூழ்ந்து கொண்டு, “எங்களுக்கு எப்படி குறைந்த மதிப்பெண் கொடுக்கலாம்?” என்று கேட்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிரியர்கள் திட்டமிட்டு உண்மையிலேயே குறைவான மதிப்பெண் கொடுத்தார்களா அல்லது உண்மையிலேயே மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்திருந்தும், ஆசிரியர்கள் மதிப்பெண்களை குறைத்து காட்டினார்களா என்பது தெரியவில்லை. இது குறித்து கல்வி அதிகாரி கோபிகந்தர் கூறுகையில், “ஆசிரியர்களை மாணவர்கள் கட்டி வைத்திருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்றோம். ஆசிரியர்கள் தங்களுக்கு குறைவான மதிப்பெண் கொடுத்திருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். ஆசிரியர்களிடம் இது குறித்து கேட்டதற்கு சரியாக பதிலளிக்கவில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆசிரியர்களிடம் பேசி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
ஆசிரியர் குமார் சுமன் என்பவர் இது குறித்து கூறுகையில், “தேர்வு முடிவுகள் குறித்து பேசவேண்டும் என்று மாணவர்கள் எங்களை அழைத்தனர். தேர்வு முடிவுகள் தங்கள் வாழ்க்கையை பாழாக்கிவிட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவில் செயல்முறை தேர்வு மதிப்பெண் சேர்க்கப்படாததுதான் பிரச்னைக்கு காரணமாகும். பள்ளி தலைமை ஆசிரியர்தான் செயல்முறை தேர்வு மதிப்பெண்ணை தேர்வு முடிவுகளோடு சேர்க்கவேண்டும். இதில் நாங்கள் எதுவும் செய்யமுடியாது” என்று தெரிவித்தார். மாணவர்கள் ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே தும்காவில்தான் மாணவி ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.