திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் தெக்களூர் ஊராட்சியில் இருளர் காலனியில் 30க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் அமைத்து தெரு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அத்தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இருளர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தெரு குடிநீர் குழாய் அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் போது, ஒப்பந்ததாரரின் அலட்சிய போக்கால் குழாயில் குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத வகையில் தெரு பொது குழாயை மூடியவாறு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் இருளர் இன பெண்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. தடையின்றி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக ஆகஸ்ட் மாதம் 25 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகர் கிராமத்தில் சின்ன திருப்பதி கோவில் முதல் குருசாமி கொட்டாய் வரையில் சுமார் 6 லட்சம் மதிப்பில் ஊராட்சி நிர்வாகம் மூலம் புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. என்.ஆர்.ஜி.எஸ் நிதியிலிருந்து அமைக்கப்பட்ட இந்த சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின்போது சாலையோரத்தில் பயன்பாட்டில் இருந்த கைவிசை பம்புடன் கூடிய ஆழ்துளை கிணற்றையும் சேர்த்து சாலை அமைக்கப்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராம கணேஷ் அவர்களிடம் கேட்டபோது, கைபம்பை மூடி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது தவறு தான் என்றும் உடனடியாக சிமெண்ட் சாலையை உடைத்து, கைபம்பை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
முன்னதாக ஆகஸ்ட் மாதம் 22 அன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் பகுதியில் கடந்த சில தினங்களாக சாலையில் சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் காங்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்திரா காலனி பகுதியில் கான்கிரீட் அமைக்கும் போது சாலையில் இருந்த அடிபம்பை அகற்றாமல் அலட்சியமாக அதன்மீதே காங்கிரீட் அப்படியே போடப்பட்டுள்ளது. அடிபம்பை அகற்றாமல் அப்படியே காங்கிரீட் போடப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி கேட்டதற்கு ஒப்பந்ததாரர் மதியழகன் அலட்சியமாக பதில் கூறியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு கும்பகோணம் அருகே தென்னூர் பகுதியில் வளைவாக இருந்த சாலையை நேராக அமைக்கும் வகையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. இதில், சாலையின் குறுக்கே அமைந்த மின்கம்பங்களை அகற்றி, சாலையோரம் நிறுவும் முன்னரே, மின்கம்பங்களை சாலையின் நடுவில் வைத்தே சாலை விரிவாக்க பணியை முடித்து சென்றுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை கிளப்பியிருந்தது.
கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் புதிதாக பெற, உரிமம் புதுப்பிக்க, இருசக்கர நான்கு வாகன பதிவு, பொது வாகனங்கள் தகுதி சான்று பெறவும் வாகனங்களுடன் இச்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது இச்சாலை அகலமாக உள்ளது என இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், கவனக்குறைவாக, சாலையின் நடுவே மின் விளக்கு இல்லாத மின்கம்பம் இருப்பதை அறியாமல், சற்று வேகமாக வந்தால் மின் கம்பத்தின் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதில் பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் ஆபத்து அதிகம் காரணம். இப்படி சாலையின் நடுவே ஒன்று இரண்டு அல்ல, எட்டு மின் கம்பங்கள் அமைந்துள்ளது. அந்த மின்கம்பங்களில் மின் விளக்குகள் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சியாகும். தமிழக அரசு, விரைந்து ஆபத்தான நிலையில் சாலையின் நடுவே அமைந்துள்ள எட்டு மின் கம்பங்களையும் உடனடியாக அகற்றி, சாலையோரத்தில் அதனை மாற்றி அமைத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM