ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர். மக்கள் எதிர்பார்க்கும் தலைவரும் அவர்தான் என திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்.7-ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து ‘இந்திய ஒற்றுமை நடைபயணம்’ தொடங்குகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
கடுமையான லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக இந்த நடைபயணம் தொடங்கப்படுகிறது. ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்த தகவல்களை உண்டியலில் நிதி சேகரிப்பு, துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட இயக்கங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள். எதிரியைத் தோற்கடிக்கும் ஆயுதம் எப்போதும் நம் கையில் இருக்க வேண்டும்.
பாஜகவுக்கு எதிராக தத்துவார்த்த ரீதியாக செயல்பட வேண்டும். கூட்டணி அமைப்பது ஒரு கட்சியை வளர்ப்பதற்குதானே தவிர, அழிப்பதற்கு அல்ல. காலமுறைக்கேற்ப நம்மிடம் மாற்றம் கொண்டு வந்து, கடுமையான இயக்கப் பணியாற்றி வரக்கூடிய எம்.பி தேர்தலில் அபார வெற்றியைப் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் மாநிலத் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பியுமான சு.திருநாவுக்கரசர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியினருக்கு தற்போதைய காலகட்டத்தில் பேச்சைவிட செயலேமுக்கியம். 40 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் இதுபோன்றதொரு நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, தவறாமல் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் வர வேண்டும். இந்த நடைபயணம் கின்னஸ் சாதனையில் இடம்பெறக்கூடிய வகையில் அதிகளவிலானோர் பங்கேற்றதாக இருக்க வேண்டும்.
நாட்டு மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அரசியலில் தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் மட்டுமே. நம்மைப் பொறுத்தமட்டில் ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர். மக்கள் எதிர்பார்க்கும் தலைவரும் அவர்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்எல்ஏக்கள் அறந்தாங்கி டி.ராமச்சந்திரன், மயிலாடுதுறை ராஜ்குமார், முன்னாள் மேயர் சுஜாதா,
தஞ்சை கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்டத் தலைவர்கள் ஜவகர், கோவிந்தராஜ், கலை, முன்னாள் மாவட்டத் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத், மாநில நிர்வாகி சுப.சோமு, மாவட்டப் பொருளாளர் ராஜா நசீர், கவுன்சிலர் ரெக்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.