புதுடில்லி : பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, வரும் 6ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், 2019ல் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.இந்நிலையில், ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம், 2005ல் அறிமுகம்செய்யப்பட்டது. ‘இந்த சட்டம் செல்லாது’ என, ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதை எதிர்த்து மாநில அரசு மற்றும் பலர் சார்பில், 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்குகள், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறியதாவது:இந்த இரண்டு வழக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. முதலில்,பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் குறித்து விசாரிக்கப்படும்.வரும் செப்., 6ம் தேதி முதல்கட்ட விசாரணை நடக்கும். செப்., 13ல் இருந்து முழுமையான விசாரணை நடத்தப்படும். இதைத் தொடர்ந்து ஆந்திரா உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் வழக்குகள் விசாரிக்கப்படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement