பாஜகவுடனான ஐக்கிய ஜனதா தளம் உறவு பீகாரை போல் மணிப்பூரிலும் முறிவு? செப். 3ல் நடக்கும் தேசிய செயற்குழுவில் முடிவு

கவுகாத்தி: மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வாபஸ் பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம்  கட்சி விலகியது. அதனால் பீகாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி  முறிந்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி  அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் நிதிஷ் குமாரின் கட்சி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டாலும் மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சியில் தொடர்ந்து அங்கம் வகிக்கிறது.

மொத்தமுள்ள ​​60 இடங்களில் பாஜக கூட்டணிக்கு 55 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் ஏழு பேர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆவர். பாஜகவுக்கு 48 எம்எல்ஏக்கள் உள்ளதால் பெரும்பான்மை (31 எம்எல்ஏக்கள்) பலத்திற்கு எவ்வித சிக்கலும் இல்லை. இருந்தாலும், மணிப்பூர் மாநில ஐக்கிய ஜனதா தளம் சார்பில், பாஜக அரசுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழு மாநாடு நடக்கிறது. அப்போது மணிப்பூரில் பாஜகவுக்கு அளித்த வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.