திருப்பூரில் இந்து முன்னணி கொடிகள் அகற்றம்: விளம்பர கோபுரம் மீதேறி நிர்வாகிகள் போராட்டம் 

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி கொடிகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து, தனியார் விளம்பர கோபுரம் மீது ஏறி அந்த அமைப்பின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுபோல் மாவட்டம் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இந்து முன்னணி கட்சி கொடிகளும் இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் வைக்கப்பட்டிருந்தன.

திருப்பூர் மாநகரில் புஷ்பா சந்திப்பு அவிநாசி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்து முன்னணி கட்சி கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. ஏனெனில் அவிநாசி ரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணி கொடிகள் நேற்று இரவு அகற்றப்பட்டன. இன்று காலையில் இதனை பார்த்த இந்து முன்னணி பிரமுகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் திருப்பூர் புஷ்பா சந்திப்பு பகுதியில் அவர்கள் திரண்டனர்.

இதற்கிடையே இந்து முன்னணி கொடிகளை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் அந்தப் பகுதியில் கொடிகளை வைக்க கோரியும் இந்து முன்னணி நகர தலைவர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (40), இந்து முன்னணி நகர செயலாளர் காலேஜ் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (26) ஆகிய இருவரும் திருப்பூர் புஷ்பா மேம்பாலம் அருகே உள்ள சுமார் 70 அடி உள்ள தனியார் விளம்பர கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு, திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீண்டும் அந்த பகுதியில் இந்து முன்னணி கட்சி கொடிகளை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் கீழே இறங்கி வந்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.