காவல் நிலையத்தில் கையெழுத்திட தினமும் பேருந்தில் பயணம் செய்து சோர்வடைந்ததால், இருசக்கர வாகனத்தை திருடியதாக கொலைக் குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். 40 வயதான இவர், ஸ்பென்சர் பிளாசாவில் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் உள்ள பார்க்கிங்கில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் இரவு வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இருசக்கர வாகனம் காணாமல் போனது குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில், தினேஷ் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் காணாமல் போன இருசக்கர வாகனத்தின் புகைப்படம் மற்றும் சிசிடிவியில் பதிவான குற்றவாளியின் புகைப்படம் ஆகியவற்றை தினேஷ், தங்களது வியாபார ரீதியிலான வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்டு, தனது இருசக்கர வாகனம் திருடு போய் விட்டதாகவும், அதுபற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனைக் கண்ட சிலர் அவரது வாகனம் நெற்குன்றம் – அண்ணாநகர் பகுதிகளில் சுற்றுவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி இரவு 11 மணியளவில், அண்ணாநகர் டவர் பார்க் அருகே அவரது இருசக்கர வாகனம் இருப்பதை தெரிந்து கொண்ட இருசக்கர வாகன உரிமையாளர் தினேஷ், தனது நண்பர்களோடு சென்று கையும் களவுமாக அந்த நபரை பிடித்து கொண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போலீசார், குற்றவாளியை பிடித்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (23) என்பது தெரியவந்தது. மேலும் பி.காம் பட்டதாரியான இவர், அண்ணாசாலை பகுதியில் தாஸ் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்ததாகவும், தினமும் அண்ணாசாலை காவல் நிலையத்தில் வந்து கையெழுத்திட்டு செல்லவேண்டும் என நீதிபதி உத்தரவின் பேரில் தினமும் கையெழுத்திட்டதாகவும், அவ்வாறு தினமும் பேருந்தில் பயணம் செய்வதால் சோர்வடைந்து விடுவதாகவும், தினமும் வந்து செல்ல பேருந்து பயணத்தில் மட்டுமே மூன்று மணி நேரம் செலவிட வேண்டியுள்ளதால், அண்ணாசாலை காவல்நிலையத்தின் எதிரே இருந்த ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் இருசக்கர வாகனத்தை திருடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் திருடிய வாகனத்தை, அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தால் சிக்கி கொள்வேன் என்பதை அறிந்து, தெருவில் நிறுத்திவிட்டு காவல் நிலையத்துக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவம் நடந்த இடம் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் என்பதால், அங்கு பார்த்தசாரதியை ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM