Tamil Nadu Weather Forecast: தமிழகத்தில் வருகின்ற ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
உள்தமிழகம் பகுதிகளில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், தென்காசி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பிருக்கிறது.
வருகின்ற செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் வரை நிலைக்க வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் 10 சென்டிமீட்டர் மழையும், திருப்பூர், சிவகங்கை, ஈரோடு தாளவாடியில் 9 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை வண்டியூர் ஆகிய இடங்களில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில், மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ. வேகத்திலும் இடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
கேரள கடலோரப் பகுதிகளான லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ. இடையே வீசக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர். இன்று மற்றும் செப்டம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மேல் குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil