ஊரைவிட்டு கூண்டோடு வெளியேற்றப்பட்ட தலித் சமூகத்தினர்… ஜார்க்கண்டில் அதிர்ச்சி சம்பவம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வுருகிறது. இந்த நிலையில், தமது முதல்வர் பதவிக்கான அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தமக்கு நெருக்கமானவர்கள் நிலக்கரி சுரங்கத்தை ஹேமந்த் சோரன் ஒதுக்கீடு செய்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க, இந்திய தேர்தல் ஆணையம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு அண்மையில் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து, ஹேமந்த சோரன் எந்த நேரமும் முதல்வர் பதவியை இழக்கலாம் என்ற நிலை நீடித்து வருவதால் அந்த மாநில அரசியலில் சில நாட்களாகவே பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த பரபரப்பு போதாதென, தங்களுக்கு வேண்டுமென்றே மதிப்பெண்ணை குறைத்து போட்டதாகக் கூறி, ஆசிரியர்களை பள்ளி மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சி சம்பவம் இன்று அங்கு அரங்கேறி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், பலமு மாவட்டத்துக்குட்பட்டது டோங்ரி பகாதி கிராமம். இந்த கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் சுமார் 40 ஆண்டுகளுக்கு வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த குடும்பங்கள் அனைத்தும் ஊரைவிட்டு கூண்டோடு வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்கு துரத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த கிராமத்தில் பெரும்பான்மையான முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த கிராம தலைவர் தலைமையிலான கும்பல் தங்களை ஊரை விட்டு வெளியேற்றுயுள்ளதாக பாதிக்கப்பட்ட தலித் சமுகத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஆனால், இது வகுப்புவாத பிரச்னை இல்லை என்றும், நிலம் தொடர்பான பிரச்னை எனவும் விளக்கம் அளித்துள்ள பலமு மாவட்ட போலீஸ், இச்சம்பவம் தொடர்பாக கிராம தலைவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு, மொத்தம் 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தலித்துக்கள் வசித்துவரும் நிலம் தங்களுடையது என உரிமை கொண்டாடும் முஸ்லீம் சமூகத்தினர் அதற்கான ஆவணங்களை ஆதரமாக காட்டுகின்றனர். தலித் சமூகத்தினரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. இதுதான் பிரச்னைக்கு அடிப்படை காரணம். இந்த விவகாரத்துக்கு தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலித் சமூகத்தினர் அனைவரும் தற்போது பழைய போலீஸ் நிலைய கட்டடத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.