தும்பலஅள்ளி அணைக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் வருவதால் அப்பகுதி விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் தும்பலஅள்ளி பகுதியில் கடந்த 1986-ம் ஆண்டு தும்பலஅள்ளி அணை கட்டப்பட்டது. 2,617 ஏக்கர் பாசன பரப்பு கொண்ட இந்த அணையில், 14.76 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி (சின்னாறு) அணை நிரம்பி வெளியேறும் தண்ணீரை பிரதான நீராதாரமாகக் கொண்டது தும்பல அள்ளி அணை.
பஞ்சப்பள்ளி அணை நிறைந்த பின்னர் வெளியேறும் உபரிநீர் அங்குள்ள செங்கன் பசுவந்தலாவ், ஜெர்த்தலாவ் உள்ளிட்ட 4 ஏரிகளை நிறைத்துக் கொண்டு தும்பல அள்ளி அணைக்கு வந்து சேரும். கடந்த 17 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத நிலையில் பஞ்சப்பள்ளி அணை நிறைந்து வெளியேறும் தண்ணீர் அங்குள்ள 4 ஏரிகளை நிறைக்கும் முன்பே மழைக்காலம் முடிந்து விடும்.
எனவே, தும்பல அள்ளி அணையின் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வழிந்தோடும் மழைநீர் மட்டும் அணையின் மையப்பரப்பில் குறைந்த அளவில் குட்டை போல ஆண்டுதோறும் தேங்கி நிற்கும்.
ஆனால், நடப்பு ஆண்டில் பஞ்சப்பள்ளி அணைக்கான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அந்த அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் 4 ஏரிகளை நிறைத்துக் கொண்டு தற்போது தும்பலஅள்ளி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் தற்போது 9.84 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேலும், அணைக்கு விநாடிக்கு 312 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
17 ஆண்டுகளுக்கு பின்னர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் அணையின் பாசனப் பரப்பு விவசாயிகள் மட்டுமன்றி, சுற்று வட்டார பகுதி விவசாயிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், அணைக்கு தண்ணீர் வருவதை பார்க்க சுற்று வட்டார பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகை தருகின்றனர்.
அணைக்கான நீர்வரத்து நிலவரம், அணையின் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து நேற்று தருமபுரி மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் குமார் அணையை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் கூறும்போது, ‘தும்பலஅள்ளி அணை ஓரிரு நாளில் நிறைந்து விடும்.
இந்த அணையில் இருந்து கிருஷ்ணாபுரம் வரை 4 ஏரிகள் தண்ணீர் பெறுகின்றன. அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டிய பின்னரும் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்தால் 4 ஏரிகளையும் நிறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்’ என்றார். ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.