எரிபொருள் விநியோக பிரச்சினைகளை குறைப்பதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாளொன்றுக்கு 4,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் பெற்றோலை விநியோகிப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பயணிகள் பஸ்கள் மற்றும் பாடசாலை வேன்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 35,000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 வகை பெற்றோல் அடங்கிய கப்பலொன்றில் இருந்து, பெற்றோல் தரையிறக்கும் பணி நேற்று (30) ஆரம்பமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பெற்றோலிய கூட்டுத்தாபனம் காசோலை முறையின் ஊடாக எரிபொருள் விநியோகிப்பதை இடைநிறுத்தியுள்ள நிலையில், ஒரேமுறையில் பணம் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் எரிபொருள் வரிசைகள் அதிகரித்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அது தொடர்பான கொடுப்பனவுகள் புதுப்பிக்கப்படாமையால் தாம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.