லடாக்: இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து சாலைகள், பாலங்கள், கோபுரங்களை அமைத்து புதிய நகரத்தை வேகமாக கட்டமைத்து வருகிறது செயற்கோள் படங்களின் வாயிலாக தெரியவந்து இருக்கிறது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள், சாலைகளை கட்டியது. இந்த புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக லடாக்கின் கைலாஷ் பகுதியில் சீனாவின் ஊடுருவலை இந்திய பாதுகாப்பு படைகள் தடுக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டது. அப்போது கைலாஷ் பகுதியில் சில இடங்களும் கிடைத்தன.
சீனா அத்துமீறல்
அதன் பின்னர் இருநாட்டு படைகளை மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனை பயன்படுத்தி சீனா இந்திய எல்லை பகுதிகளில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் லடாக்கில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் சீனா வேகமாக நகரத்தை உருவாக்கி வருகிறது.
சாலைகள், கோபுரங்கள்
பேன்காங் ஏரியின் தெற்கு பகுதியை இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் எல்லைக்கு உட்பட்ட ருடோக் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ள அந்நாட்டு படைகளின் முகாமுக்கு அருகே இப்பகுதி இருக்கிறது. மேலும் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் கோபுரங்களையும் சீனா அமைத்து இருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது.
பாலம் அமைப்பு
அத்துடன் 15 மீட்டர் நீளம் கொண்ட நீர் வழி பாலம் ஒன்றையும் சீனா அமைத்து வருகிறது. பேன்காங் ஏரியில் சீனாவின் எல்லைக்கு உட்பட்ட வடக்கு பகுதியில் இதற்கு தேவையான கட்டுமான பொருட்கள், கருவிகள் போன்றவை குவிக்கப்பட்டு இருப்பதையும் செயற்கைகோள் படங்கள் தெளிவாக காட்டுகின்றன.
சீனா வசம் இந்திய பகுதி
மக்சார் டெக்னாலஜீஸ் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் இந்த செயற்கைகோள் புகைப்படங்களில், பேன்காங் ஏரியின் தெற்கு பகுதியை ஏற்கனவே சீனா வளைத்துவிட்டது தெளிவாக தெரிகிறது. மற்ற பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான பணியில் கட்டுமானங்களை வேகமாக அமைத்து வருகிறது சீனா.
ராணுவ போக்குவரத்து
சீனாவின் ராணுவ போக்குவரத்தை அதிவேகத்தில் மேற்கொள்வதற்காக இங்கு புதிய சாலையை அதிக தரத்தில் அமைத்து வருகிறது சீனா. பேன்காங் ஏரியில் இரண்டு கரைகளுக்கும் இடையே உள்ள 15 மீட்டர் நீளம் கொண்ட இடைவெளியை கடக்கும் வகையில் பாலத்தை சீனா அமைத்து வருகிறது. இதன் மூலம் ஒருகரையிலிந்து மற்றொரு கரைக்கு வாகனம் மூலமாக சீனா படைகளால் செல்ல முடியும் என்பதால் நேரமிச்சம் ஏற்படும்.
கூடாரங்கள்
சாலைகள், பாலம் அல்லாமல் கடந்த சில மாதங்களாக, கூடாரங்கள், கோபுரங்களையும் சீனா அமைத்து வருகிறது. ஏற்கனவே சீனா இப்பகுதியில் மின் கோபுரங்களை அமைத்து வைத்திருந்த நிலையில் தற்போது புதிய கோபுரங்களை அமைத்து வருகிறது. இந்த கோபுரங்கள் துணை மின் நிலையங்களாகவும் பராமரிப்பு தளங்களாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா விளக்கம்
“செயற்கைக்கோள் புகைப்படத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் பாலம் அமைந்து இருக்கும் பகுதியை கடந்த 60 ஆண்டுகளாக சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. இத்தகையை சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.” என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்து உள்ளது.