சென்னை: தமிழக அரசின் கடன் உத்தரவாத திட்டம், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் என்று தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற மாநாட்டில் குறு, சிறு தொழில் துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு புதுமையான திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக குறு, சிறு நிறுவனங்கள் பிணையில்லா கடனை ரூ.40 லட்சம் வரை எளிதாக பெறும் வகையில் கடன் உத்தரவாத திட்டம் இணையதளம் மூலமாக செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் 6 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு தரும் உத்தரவாதத்தால் பல வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன் வழங்க முன்வருவது குறு, சிறு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும். சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல், வங்கிகளின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டு பட்டியலின, பழங்குடி மக்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்க தாய்கோ வங்கி மற்றும் தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதையும் டான்ஸ்டியா வரவேற்கிறது.
ஒவ்வொரு மாவட்ட தொழில் மையத்திலும் ஓர் ஏற்றுமதி வழிகாட்டு மையம் விரைவில் தொடங்கப்படும் என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஏற்றுமதி வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.
வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் குறு, சிறு தொழில் நிறுவனங்களை சிறப்பு வகை தொழில் பிரிவில் சேர்த்து, அதற்காக முதலீட்டு மானியத்தை வழங்கும் திட்டத்தால் 2 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.