மாஸ்கோ: முன்னாள் சோவியத் யூனியனின் கடைசி தலைவராக ஏழு ஆண்டுகள் இருந்த மைக்கேல் கார்பசேவ், 91, வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பாதிப்பால் உயிரிழந்தார்.
சோவியத் யூனியனின் கடைசி தலைவராக, 1985 மார்ச்சில் பதவியேற்றார், மைக்கேல் கார்பசேவ். அப்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்தது, ஆட்சியில் கட்சியின் தலையீட்டை குறைத்தது என, பல சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார். இதோடு உலக நாடுகளுடனான பனிப்போரையும் முடிவுக்கு கொண்டு வந்தார்.
கடும் விமர்சனங்கள்
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அவர் வகுத்த திட்டங்கள், மேற்கத்திய நாடுகளுடனான நட்பு என, அவர் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள் அப்போது சோவியத் யூனியனில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தின.பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொண்டபோதும், சோவியத் யூனியன் துண்டாவதை அவரால் தடுக்க முடியவில்லை. இதையடுத்து, 1991 டிச., 25ல் அவர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன், சோவியத் யூனியனும் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனில் இருந்த பல நாடுகள் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன.
இரங்கல்
சோவியத் யூனியனுக்கு உலக நாடுகளுடன் ஏற்பட்டிருந்த பனிப்போரை சிறப்பான முறையில் முடிவுக்கு கொண்டு வந்ததற்காக, 1990ல் கார்பசேவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.கடந்த 1996ல் நடந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் கார்பசேவ் போட்டியிட்டார். ஆனால், அவருக்கு 1 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.
இந்நிலையில் உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் கார்பசேவ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருடைய மறைவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல்தெரிவித்துள்ளனர்.கார்பசேவுக்கு மகள் மற்றும் இரண்டு பேத்திகள் உள்ளனர். மாஸ்கோவில், மனைவியின் கல்லறைக்கு அருகில் கார்பசேவ் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
கார்பசேவ் சோவியத் யூனியனின் தலைவராக இருந்தபோது, இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். காங்கிரசைச் சேர்ந்த ராஜிவ் பிரதமராக இருந்தபோது, 1986 மற்றும் 1988ல் என, இரண்டு முறை இந்தியாவுக்கும் கார்பசேவ் பயணம் மேற்கொண்டார்.கடந்த 1986ல் நான்கு நாள் பயணமாக, 110 பேர் குழுவுடன் வந்த கார்பசேவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப் பட்டது.
அந்த நேரத்தில், அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருங்கிய நட்புடன் இருந்தது. எல்லையிலும் பாகிஸ்தானால் நமக்கு பிரச்னை இருந்தது. அந்த நேரத்தில் அவருடைய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. பெரிய அளவில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகா விட்டாலும், அணு ஆயுத தயாரிப்புக்கு எதிராக டில்லி பிரகடனம் வெளியிடப்பட்டது.அதே நேரத்தில், 1988ல் கார்பசேவ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட நேரத்தில், அமெரிக்காவுடன் சோவியத் யூனியன் நெருக்கம் காட்ட முயன்றது. இதனால், இந்தியாவை சமாதானப்படுத்த அவருடைய பயணம் அமைந்ததாக கூறப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement