சென்னை: ஈரோட்டில் 1 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கும் தம்பதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே பவர்ஹவுஸ் சாலையில் உள்ள, ‘ஏஎம்வி ஹோம்லி மெஸ்’ முன்பாக காலை, மதியம், மாலை என 3 நேரங்களிலும் வாடிய முகத்துடன் வரும் நோயாளிகளின் உறவினர்கள், மலர்ந்த முகத்துடன் மருத்துவமனைக்குத திரும்புகின்றனர். ஒருவேளை உணவுக்கு ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு ஏழை நோயாளிகளுக்கு வழங்கப்படும் தரமான உணவு தான் இந்த மலர்ச்சிக்கு காரணம் என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏழை நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் வெங்கட்ராமனுக்கு முகம் தெரியாத பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். வெங்கட்ராமனின் மனைவி ராஜலட்சுமி, மகள்கள் மோனிகா, ரம்யா ஆகியோரும் அவரது இந்த சேவைக்கு உதவி வருகின்றனர்.இந்த தம்பதியை பராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: ‘மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி, எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் – ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது. ஈதல், இசைபட வாழ்தல், இதுவே தமிழறம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.