இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய, பாக்., அரசு திட்டமிட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த ஒரு மாதமாக பலத்த மழை பெய்து வருகிறது. நாட்டில் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. விளைநிலங்கள் முற்றிலும் நாசமடைந்து விட்டன. இதனால் வெங்காயம், தக்காளி, அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்து உள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை, 2019ல் மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, இந்தியாவுடனான துாதரக உறவுகளை குறைத்த பாகிஸ்தான், வர்த்தக உறவையும் துண்டித்தது. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாக்.,கில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்வது குறித்து திட்டமிட்டு வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாக்., நிதி அமைச்சர் மிப்தா இஸ்மாயில் கூறியதாவது:நிலைமையை சமாளிக்க இந்தியாவுடனான வர்த்தக உறவை மீண்டும் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. கூட்டணி கட்சியினருடன் இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
ஈரானிலிருந்து வெங்காயம் மற்றும் தக்காளியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.’வெள்ளப்பெருக்கை காரணமாக காட்டி, இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்துவது சரியல்ல’ என, அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement