புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான ரூ200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு டெல்லி நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு மோசடிகளில் சம்பந்தப்பட்டவர். இவர் திகார் சிறையில் இருந்தபடியே போன் மூலமாக தொழிலதிபர்களை மிரட்டி ரூ200 கோடி பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரிக்கிறது.
இதற்கிடையே, சுகேஷ் சந்திரசேகருக்கும், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சுகேஷ் விலை உயர்ந்த பல கோடி மதிப்பிலான பரிசுகளை ஜாக்குலினுக்கு கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை பலமுறை விசாரணை நடத்தி உள்ளது. அதில் சுகேஷிடம் இருந்து பரிசுகளை பெற்றதை ஜாக்குலின் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனாலும், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பற்றிய விசாரணை விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் வரும் 26ம் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி டெல்லி நீதிமன்றம் முதல் முறையாக ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.