திருவனந்தபுரம்:கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள பரோக் பகுதியைச் சேர்ந்தவர் கோயா (66). இவர் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு ஸ்கூட்டர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நிலைமை மோசமாக இருந்ததால் அங்கிருந்து ஒரு ஆம்புலன்சில் ஏற்றி அவரை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆம்புலன்சில் ஒரு டாக்டரும், கோயாவின் 2 நண்பர்களும் உடன் சென்றனர்.
மருத்துவமனையை அடைந்தவுடன் ஆம்புலன்சின் கதவை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. உள்பக்கதிலிருந்து திறக்க முயற்சித்தும், வெளிப்புறத்திலிருந்து முயற்சித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் வேறு வழி இல்லாமல் ஒரு கோடாலியால் கதவை உடைத்து திறந்தனர். அதற்குள் கோயாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்த ஆம்புலன்ஸ் 20 ஆண்டுகள் பழையது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.