புதுடெல்லி: முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங் வரும் 19ம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முதுகலை மருத்துவ படிப்புக்கான (எம்டி) நுழைவுத் தேர்வு (நீட்-பிஜி) வழக்கமாக ஜனவரியில் நடத்தப்பட்டு, மார்ச்சில் கவுன்சலிங் தொடங்கும். ஆனால், கொரோனா தொற்று மற்றும் கடந்தாண்டு சேர்க்கை செயல் முறை தாமதம் காரணமாக, இந்தாண்டு தேர்வு கடந்த மே 21ம் தேதிதான் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜூன் 1ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் இப்படிப்புக்கான கவுன்சலிங்கை தொடங்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. ஆனால், தேசிய மருத்துவ ஆணையம் நடப்பு கல்வியாண்டுக்கான புதிய சேர்க்கைக்கான கடிதங்களை அனுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சலிங் வரும் 19ம் தேதியோ அல்லது 3வது வாரத்திலோ தொடங்கும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.