ஒசாகா,
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒசாகாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், அண்மையில் உலக போட்டியில் மகுடம் சூடிய அகானே யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய யமாகுச்சி 21-9, 21-17 என்ற நேர் செட்டில் வெறும் 30 நிமிடங்களில் சாய்னாவை பந்தாடினார். யமாகுச்சிக்கு எதிராக 13-வது முறையாக மோதிய சாய்னா அதில் சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான 21 வயதான இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை கென்டோ நிஷிமோட்டோ (ஜப்பான்) 18-21, 21-14, 21-13 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 22-20, 23-21 என்ற நேர் செட்டில் ஆல் இங்கிலாந்து சாம்பியனான தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் லீ ஸி ஜியாவை (மலேசியா) வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார்.
பெண்கள் இரட்டையரில் திரீஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த், ஆண்கள் இரட்டையரில் எம்.ஆர்.அர்ஜூன்- துருவ் கபிலா, கலப்பு இரட்டையரில் வெங்கட் கவுரவ் பிரசாத் – ஜூகி தேவாங்கன் ஆகிய இந்திய ஜோடிகள் முதல் சுற்றுடன் நடையை கட்டின.