தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில், பெய்த கனமழைக்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி உள்பட 2 பேர் இறந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யாரப் தர்கா அருகே அரசமரத்து திண்ணையில் நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே, தனியாருக்கு சொந்தமான நிலத்திற்கு, 12 அடி உயரம் மற்றும் 30 அடி நீளத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், நாகர் சிலைகளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தனர். அருகில் சில சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, ஊறியிருந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், அரசமரத்தை சுற்றி விளையாடிக் கொண்டிருந்த சஹானா(12), அமுல்யா(11), பொம்மை விற்பனை கடை வைத்திருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அமிதாபேகம்(35), இஷாத்அலி(42) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதில், அமிதாபேகம் இறந்தார். படுகாயமடைந்த சஹானா, அமுல்யா, இஷாத்அலி ஆகிய மூவரையும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சஹானாவும் உயிரிழந்தாள். மற்ற இருவரும் சிகிச்சை பெறுகின்றனர்.