கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வப்போது தண்ணீர் வரத்து குறைந்தாலும், அன்றிலிருந்து இன்றுவரை பாலாற்றில் தண்ணீர் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தற்போது பாலாற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழுவதுமாக நிரம்பின. தற்போது அந்த ஏரிகள் பெரும்பகுதி தண்ணீர் வற்றி, நீரின் அளவும் குறைந்துள்ளது. ஒரு சில ஏரிகளில் நீர் முழுவதுமாக வற்றியுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளில் தேக்கப்படும் நீர் பெரும்பாலும் விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள ஏரிகளில் சேமிக்கப்படும் தண்ணீர் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்காக மட்டுமே சேமிக்கப்படுகிறது.
அப்படி நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்காக மட்டும் சேமிக்கப்படும் ஏரிகள்தான் வேலூரை அடுத்த கழிஞ்சூர் மற்றும் காட்பாடி ஏரி. கடந்த ஆண்டு பாலாற்று வெள்ளத்தால் இந்த ஏரிகளில் நிரம்பின. இந்த ஏரிகளில் தேக்கப்படும் நீரால் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கிறது.
தற்போது கழிஞ்சூர் ஏரியில் 50 சதவிகித அளவு மட்டும்தான் தண்ணீர் உள்ளது. இந்த ஏரி திருமணி பாலாற்றில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படும்.
தற்போது பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறையினரால் இன்னும் ஏன் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீரால் மட்டுமே எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கிறது. ஆகவே தற்போது பாலாற்றில் வரும் தண்ணீரைக் கொண்டு விரைவாக ஏரியை நிரப்ப வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து வேலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்டோம் ” வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பே பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வரும் நீரை கொண்டு கழிஞ்சூர் ஏரியை இரண்டு நாள்களில் நிரப்பி விடலாம். ஆனால் பருவ மழை தொடங்கிய பிறகு நீர்வரத்து மேலும் அதிகரித்தால் கடந்தாண்டு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததைப் போல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் வடகிழக்கு பருவ மழையை பொறுத்து கழிஞ்சூர் ஏரிக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கழிஞ்சூர், காட்பாடி ஏரி கரையோரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த ஏரிகள் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்படவிருக்கிறது இதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்றும், இதனால் ஏரி கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் அகற்ற விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படும்” என்றார்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது, “ஏரி நிரம்பிய பிறகு செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால் தான் கடந்த ஆண்டு குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. ஏரி நிரம்பி வழியும் இடத்தில் 30 அடியாக இருக்கும் கால்வாய் போக போக 5 அடியாக குறைந்துள்ளது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து உள்ளவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் தான். ஆகவே இந்த கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றி ஏரிக்கு தண்ணீர் நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.