கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீனில் விடுவிப்பு: சேலம் சிறையில் இருந்து வெளியே வந்தனர்

சேலம்: கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் கைதாகி, சேலம் சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும், நேற்று காலை ஜாமீனில் வெளியே வந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து, பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் 5 பேருக்கும் கடந்த 26ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ரவிக்குமார், சாந்தி, ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரில், ஒவ்வொருவருக்கும் 2 பேர் தலா ரூ10 ஆயிரத்திற்கான பிணையப்பத்திரம் கேட்டு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலும், சிவசங்கரன் சார்பில் பிணையப்பத்திரம் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்தனர்.

இதையடுத்து பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கும், நீதிமன்றம் மூலமாக பிணையப்பத்திரம் வழங்கப்பட்டது. அந்த பிணையப்பத்திரம் சேலம் மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் நேற்று  ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சேலம் பெண்கள் கிளை சிறையில் இருந்து பள்ளியின் செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கிருத்திகா ஆகியோர் நேற்று காலை ஜாமீனில் வெளியே வந்தனர். இதேபோல், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆகியோரும், நேற்று காலை ஜாமீனில் வெளியே வந்தனர். ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்பிரியா ஆகியோர், 4 வாரம் சேலத்தில் தங்கி, செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் கையெழுத்திடவும்,  பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர், 4 வாரங்களுக்கு மதுரையில் தங்கி தல்லாகுளம் காவல் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் கையெழுத்திடவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.