தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் 460-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கக்சாவடிகள் இருக்கின்றன. அதில், தமிழ்நாட்டில் மட்டும் 53 இடங்களில் சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

அதன்படி, விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 20 சுங்கச்சாவடிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. 

விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், இதுவரை கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்பட்டுவந்தது. தற்போது, ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான  ஒருவழி கட்டணம் 355 ரூபாயாகவும்,  பலமுறை பயணம் செய்ய 535 ரூபாயாகவும் சுங்கக் கட்டணம் அதிகரிக்கிறது. 

மாதாந்திர கட்டணம் 10 ஆயிரத்து 665 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  பல அச்சு வாகனங்களுக்கு ஒரு வழிக்கட்டணம் 570 ரூபாயாகவும்,  பலமுறை பயணம் செய்ய 855 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் 17 ஆயிரத்து 140 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டிருக்கும் இந்த சுங்கச்சாவடி கட்டணத்துக்கு வாகன ஓட்டிகள் தங்களது கடுமையான அதிருப்தியை தெரிவித்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.