காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஈரோடு மாவட்டத்தில் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து,448 பேர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் நீர் திறக்கப்படுவதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர பகுதி குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால், கடந்த 3 நாட்களுக்கு முன்பே கரையோர குடியிருப்புகளில் உள்ளவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றிய அதிகாரிகள், அவர்களை தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
பவானி, கொடுமுடி, மொடக்குறிச்சி தாலுகாவில் அமைக்கப்பட்டுள்ள 5 நிவாரண முகாம்களில், 143 குடும்பங்களைச் சேர்ந்த 448 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.
மேலும், ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் காவல்துறை, வருவாய்த் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பவானிசாகர் அணை
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால், பவானிசாகர் அணைக்கு நேற்று மாலை விநாடிக்கு 6,700 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து, கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 1,500 கனஅடியும், பவானி ஆற்றில் 5,100 கனஅடியும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாளவாடியில் 88 மிமீ மழை
ஈரோடு மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தாளவாடியில் 88 மிமீ மழை பதிவானது. அம்மாப்பேட்டையில் 36, குண்டேரிப்பள்ளத்தில் 34 மிமீ மழை பதிவானது.