TN: Police presence in areas around Parandur village beefed up as protests over new airport grow: சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு உள்ளூர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் முதல் “எங்கும் போலீசார்” என கிராம மக்கள் குற்றம் சாட்டினாலும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என காஞ்சிபுரம் போலீசார் கூறியுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சுற்றி ஓரிரு இடங்களில் தடுப்புகள் மற்றும் போலீஸ் சோதனைச் சாவடிகள் உள்ளன என்று கிராமவாசி ஒருவர் தெரிவித்தார். மேலும், “பரந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஏகனாபுரம் சந்திப்பு மற்றும் பரந்தூரில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் வழி எங்கும் எங்கு பார்த்தாலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் ஒரு சில இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தடுப்புகள் போடப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள், அது ஒரு சிறிய கூட்டமாக இருந்தாலும், காவல்துறையினர் விரைவில் அந்த இடத்திற்கு வருகிறார்கள், ”என்று கிராமவாசி கூறினார்.
இதையும் படியுங்கள்: சேலம்- சென்னை 8 வழிச் சாலையை எதிர்க்கவும் இல்லை; போடுவோம் என்று கூறவும் இல்லை: அமைச்சர் எ.வ வேலு
ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள காஞ்சிபுரம் போலீசார், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தடுக்க இது வழக்கமான நடைமுறைதான் என்று கூறியுள்ளனர். “போலீஸ் பணியாளர்கள் அதிக அளவில் குவிக்கப்படவில்லை, ஐந்து முதல் ஆறு பேர் இருப்பார்கள், இது வழக்கம். இரவு ரோந்து குழுவினர் எப்பொழுதும் வந்திருப்பதால், புதிதாக எதுவும் இல்லை. உண்மையில், போலீஸ் இருப்பதால் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள், ”என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
பரந்தூரில் புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களை ஆரம்பித்ததில் இருந்து பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அரசியல் நடவடிக்கைகளின் மையமாக மாறியுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கிராமங்களுக்குச் சென்று கிராம மக்களிடம் ஒற்றுமையைக் காட்டி வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய 13 கிராமங்களில் வசிக்கும் மக்களின் குறைகளை அறிந்து கொள்வதற்காக கூட்டத்தை கூட்டினார். குடியிருப்புவாசிகளின் பிரச்னைகளை விசாரிக்க, தங்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைக்கவுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். இந்தக் குழு கிராமங்களுக்குச் சென்று, அவற்றைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் நிலையை ஆய்வு செய்து, விமான நிலையம் கட்டப்படும் நிலத்தை ஆய்வு செய்யும் என்றார். இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அரசுடன் இது குறித்து ஆலோசித்து, எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்று அன்புமணி கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பன்னூர், திருப்போரூர் மற்றும் படாளம் உள்ளிட்ட நான்கு தேர்வு செய்யப்பட்ட தளங்களில் இருந்து பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். விமான நிலையம் கட்டுவதற்காக மொத்தம் 4,563.56 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும், 1,005 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு வழங்குவதாகவும், பொருத்தமான மாற்று நிலங்களை வழங்குவதாகவும், இக்கிராமங்களைச் சுற்றியுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் இன்னும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
பரந்தூர், ஏகனாபுரம், நாகப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சுற்றுசூழல் ஆர்வலர்களும் கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு, கட்டுமான பணியை தொடங்கும் முன் அரசு விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil