இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET UG 2022 தேர்வு கடந்த ஜூலை மாதம் 17அம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகளானது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 95 சதவீத மாணவ, மாணவிகள் எழுதிய நீட் தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 3,570 மையங்களில் நடைபெற்றது. இந்தச் சூழலில்,இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் (ஆன்சர் கீ) வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடை குறிப்புகளுடன், OMR விடைத்தாள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மாணவ, மாணவிகள் தங்களின் தோராயமான மதிப்பெண்களைக் கணக்கிட்டுக்கொள்ளலாம். அதிகாரப்பூர்வ NEET UG இணையதளமான https://neet.nta.nic.in/ என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். அந்தத் தளத்தின் முகப்பு பக்கத்தில், ‘ஆன்சர் கீ, OMR விடைத்தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட படம் மற்றும் பதிவு செய்யப்பட்ட பதில் சவால்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
இதனையடுத்து,விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் அல்லது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும். இப்போது விடைகுறிப்புகள் காண்பிக்கப்படும். அதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும், அதேநேரம் தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். இந்த நீட் மதிப்பெண் திட்டம் மற்றும் சூத்திரத்தைப் பயன்படுத்தி, மாணவர்கள் தங்களின் மொத்த நீட் மதிப்பெண்களைக் கணக்கிட்டுக்கொள்ளலாம்.
ஆட்சேபனைகளைத் தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 7, 2022 வரை அவகாசம் இருக்கும். இறுதி விடைக்குறிப்பு செப்டம்பர் 12, 2022 அன்று வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து AP TET 2022 முடிவு செப்டம்பர் 14 அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.