தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்பட்டியில் பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர்புகுந்தது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி, கோம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. ஏற்காடு மலைப் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அரூர்-சேலம் பிரதான சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகனங்கள், சிறிய ரக கார்கள் வெள்ளத்தில் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றன.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்த கன மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குப்பனூரை அடுத்த மூக்கனூர் கிராமத்திற்குள் புகுந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெய்த மழையால் நகர் முழுவதும் மழை நீர் தேங்கியது. கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேங்கிபோக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.
ஜமீன் பேட்டை தெருவில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தநிலையில், மழை நீரில் சிக்கிய மாற்றுத்திறனாளியை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர்.