புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் கலை – அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ‘சென்டாக்’ மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தாண்டு ‘சென்டாக்’ மூலம் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.
முதற்கட்ட கவுன்சிலிங்
முதல் கட்டமாக, ‘நீட்’ மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.இவர்களுக்கு, ஒரு வாரத்திற்குள் முதற்கட்ட கணினிவழி கலந்தாய்வு மூலம் ‘சீட்’ ஒதுக்கப்பட உள்ளது.அடுத்தகட்டமாக, ‘நீட்’ தேர்வு ரிசல்ட் வெளியானதும், எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைமுறைகளை துவங்க, அனைத்து நடவடிக்கைகளையும் சென்டாக் நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி மற்றும் புதுச்சேரி மருத்துவக் கல்லுாரிகளில் ‘சென்டாக்’ மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களை, இரட்டை குடியுரிமை பெற்றுள்ள மாணவர்கள், அபகரித்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது.
இரட்டை குடியுரிமை
இரட்டை குடியுரிமை, சட்டத்திற்கு எதிரானது. சேர்க்கை கோரும் மாணவர், ஒரு மாநிலத்தில் மட்டுமே குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.ஆனால் பிற மாநில மாணவர்கள் இரட்டை குடியுரிமையுடன் புதுச்சேரியில் சென்டாக், ஜிப்மரில் விண்ணப்பித்து, எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர சட்டவிரோதமாக முயல்கின்றனர்.குறிப்பாக, புதுச்சேரியில் பணியாற்ற வரும் மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் இதுபோன்று இரட்டை குடியுரிமையுடன் புதுச்சேரி மாணவர்களின் சீட்களை பறிக்கின்றனர்.
இதுபோன்று பிற மாநில மாணவர்கள் சீட் பறிப்பதை தடுக்க தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, உள்ளிட்ட பல மாநிலங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. அது பற்றி மாணவர் சேர்க்கை குறிப்பேட்டில் தெளிவாக குறிப்பிட்டு ‘செக்’ வைத்துள்ளன.ஆனால் சென்டாக் தகவல் குறிப்பேட்டில் அது போன்று இரட்டை குடியுரிமை தொடர்பான விதிமுறைகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.எனவே இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் பிற மாநில, மாணவர்கள் புதுச்சேரி மாணவர்களின் சீட்டுகளை அபகரிக்க சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வந்தது.
மாணவர்களுக்கு ‘செக்
இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையில், இரட்டை குடியுரிமை பிரச்னைக்கு ‘செக்’ வைக்கும் வகையில், முதல் முறையாக தனியாக உறுதிமொழி படிவம் பெற சென்டாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.அதாவது, பிற மாநிலங்களில் குடியுரிமை பெற்றிருக்கவில்லை. பிற மாநிலங்களில் மருத்துவ சீட் பெற விண்ணப்பிக்கவில்லை என உறுதிமொழி வாங்கப்பட உள்ளது.
இதற்கான படிவம், மருத்துவப் படிப்பு சேர்க்கை விதிமுறைகளில் சேர்க்கப்பட உள்ளது.இரட்டை குடியுரிமை சம்பந்தமாக, கடந்தாண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தபோது சில குறைபாடுகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருந்தனர்.அதனையடுத்து, தற்போது இந்த நடவடிக்கையை சென்டாக் துவக்கி உள்ளது.
குடியுரிமை தகுதிகள்
மாணவரின் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவர் அல்லது பாதுகாப்பாளர், தொடர்ந்து 5 ஆண்டுகள் புதுச்சேரியில் தங்கியிருந்தால், அந்த மாணவர் அல்லது மாணவி புதுச்சேரி குடியுரிமை பெற தகுதியுடையவராக கருதப்படுகிறார்.
மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள், புதுச்சேரி குடியுரிமை பெற வேண்டும் என்றால், மூன்று ஆண்டுகள் புதுச்சேரியில் பணியாற்றி இருப்பதுடன், அவரது மகன் அல்லது மகள் அந்த 3 ஆண்டுகள் புதுச்சேரியில் தொடர்ச்சியாக படித்து இருக்க வேண்டும்.
அதே ஊழியர் 5 ஆண்டுகள் புதுச்சேரியில் தங்கியிருந்தால், அவரது மகள் அல்லது மகன் புதுச்சேரியில் தங்கி படித்து, தேர்வு எழுதியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.பெற்றோர் 5 ஆண்டுகள் புதுச்சேரியில் தங்கி இருந்தால், குடியுரிமை பெற தகுதி பெறுகிறார்.
ஆதார் இணைக்கப்படுமா?
இரு மாநில குடியுரிமை விவகாரம் ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ். சேர்க்கையின் போது பூதாகரமாக வெடிப்பதும், அதற்கு தீர்வு காண முடியாமல், வருவாய்த் துறை திணறி வருவதும் வாடிக்கையாகி விட்டது.
ஜிப்மர் மற்றும் சென்டாக்கில் புதுச்சேரி மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் போதே, இனி மாணவரின் ஆதார் கார்டு மட்டும் இன்றி பெற்றோரின் ஆதார் கார்டுகளையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அப்போது தான் மாணவர் மற்றும் பெற்றோர் வசிக்கும் இடங்களை எளிதாக அடையாளம் காண முடியும்.
மேலும், புதுச்சேரி வருவாய் துறையினருக்கு, பிற மாநில வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்க்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.இப்படிச் செய்தால் மட்டுமே இரட்டை குடியுரிமை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்