எல்லை பதற்றத்தை தணிக்க கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

ஶ்ரீநகர்: எல்லைகளில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்தப் பதற்றத்தை தணிக்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருகிறது. இந்தியா- சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று கிழக்கு லடாக் பகுதியில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது எல்லைகளில் வெளிப்படைத்தன்மையாக இருதரப்பும் நடந்து கொள்வது; எல்லைகளில் இருதரப்பும் அமைதியை கடைபிடிப்பது ஆகியவை வலியுறுத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. ஆனால் எல்லை பதற்றத்தை தணிக்க இத்தகைய அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது வழக்கமான ஒரு நடவடிக்கைதான் என கூறப்படுகிறது.

மேலும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது எல்லைப் பகுதிகளில் நவீன கட்டமைப்புகளுடன் சீனா மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் இந்திய தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு இந்திய தரப்பில் ஆட்சேபமும் தெரிவிக்கப்பட்டது என்கின்றன டெல்லி தகவல்கள்.

இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், இருதரப்பு பேச்சுகளின் முந்தைய முடிவுகளை ஒருங்கிணைக்கவும், குளிர்காலம் உள்ளிட்ட பருவங்களில் மேற்கு பகுதியில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க பயனுள்ள முயற்சிகளை எடுக்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன. நெருங்கிய தொடர்பில் இருக்கவும், ராணுவ மற்றும் ராஜாங்க வழிகள் மூலம் உரையாடலைப் பேணவும், மீதமுள்ள பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை விரைவில் உருவாக்கவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லடாக்கின் பேன்காங் ஏரியை மையப்படுத்தி சீனா எல்லையில் புதிய நகரத்தையே அந்நாட்டு நிர்மாணித்து வருகிறது; இதற்காக நவீன கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான செயற்கை கோள் படங்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.D

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.