அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த மருத்துவரின் செயல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர் நடந்துகொண்ட விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளியை வேறு வழி இல்லாமல் தூக்கிச் சென்ற அவலமும் நிகழ்ந்துள்ளது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 67 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சிகிச்சைக்காக முக்கிய சிகிச்சை மையமாக கருதப்படுவது ஏற்காடு அரசு மருத்துவமனை. ஏற்காட்டில் ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் சிறிய அளவில் மருத்துவமனைகள் இருப்பினும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 67 கிராம மக்களுக்கு பெரிய மருத்துவமனையாக கருதப்படுவது ஏற்காடு அரசு மருத்துவமனை.
இந்த மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் உடலுக்கு மிகவும் முடியாத நிலையில் செல்லையா என்ற 70 வயது நபர் மருத்துவமனைக்கு உறவினர்களால் தூக்கி வரப்பட்டார்.
அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் செந்தில் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிகிச்சைக்கு வந்த நபரிடம் தரக்குறைவாகவும் தகாத வார்த்தை பயன்படுத்தியும் அவர் பேசியுள்ளார். இது மட்டுமின்றி அவரை கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. குடிபோதையில் மருத்துவர் சமாளித்துக் கொண்டு பேசுவதும் தான் மது அருந்துவதே இல்லை என சத்தியம் செய்வதும் வேடிக்கையாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அந்த முதியவரின் பேரன் கவுதம் ஏற்காடு காவல் நிலையத்தில் மருத்துவர் மீது புகார் அளித்துள்ளார். இவரது புகாரின் பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மருத்துவர்கள் கடவுள்களாக கருதப்படுகிறார்கள். உயிர் காக்கும் தெய்வங்களாக பார்க்கப்படும் மருத்துவர்களில் ஒருவர் பணி நேரத்தில் இப்படி போதையில் நடந்துகொள்ளும் விதம் மிகுந்த வேதனையை அளிக்கின்றது. இந்த வீடியோவை பார்த்த பலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.