Doctor Vikatan: வயிற்றுவலியும் வயிற்று எரிச்சலும் அல்சரின் அறிகுறிகளா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வயிற்றுவலியும் வயிற்று எரிச்சலும் வருகிறது. நான் தினமும் இரண்டு வேளைகள் மட்டுமே சாப்பிடுவேன். அதன் விளைவாக எனக்கு அல்சர் வந்திருக்கும் என்கிறார்கள் வீட்டில். அல்சர் பாதிப்பின் அறிகுறிகள் எப்படியிருக்கும்? இதற்கு 2 மணிநேரத்துக்கொரு முறை சாப்பிட வேண்டும், காரமாகச் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார்களே, உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.

இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்

நீங்கள் குறிப்பிட்டுள்ள வயிற்றுவலி மற்றம் வயிற்று எரிச்சல் அறிகுறிகள் அல்சராக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் அல்சர் பாதிப்பு என்பது எண்டோஸ்கோப்பி சோதனை மூலம் கண்டுபிடித்து உறுதி செய்யப்பட வேண்டியது. ‘ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ என்று சொல்வோம். அதாவது நாம் சாப்பிடும் உணவிலுள்ள அமிலம் உணவுக்குழாய்க்குள் போய்விடுவதால் இந்த மாதிரி அறிகுறிகள் வரக்கூடும்.

வயிற்றுவலி வந்தாலே பெரும்பாலானவர்கள் வயிற்றுப்புண்ணாக இருக்கும் என அதை சாதாரணமாகக் கடந்து செல்வார்கள். ஆனால் வயிற்றுவலி என்பது வேறு காரணங்களாலும் வரலாம். உதாரணத்துக்கு பித்தப்பையில் கற்கள் இருந்தாலோ, கணையத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோகூட வயிற்றுவலி வரலாம்.

எனவே, இவற்றில் ஒவ்வொரு பிரச்னைக்குமான சிகிச்சைகள் வேறுவேறு. எனவே தொடர்ந்து வயிற்றுவலி இருக்கிறது, சாப்பிட்டதும் வலி வருகிறது, அது முதுகுப் பகுதிக்குப் பரவுகிறது என்றால் அது பித்தப்பை அல்லது கணையம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகவும் இருக்கலாம் என்பதால் மருத்துவரை அணுகுங்கள்.

அல்சர் பாதிப்பில் மேல் வயிற்றுவலி இருக்கும். சாப்பிட்டதும் வலி குறையும். மற்றபடி இதிலும் முதுகுப்பகுதிக்கு வலி பரவ வாய்ப்புண்டு. சாப்பிட்டதும் வலி குறைகிற ஓர் அறிகுறியை வைத்துதான் இது அல்சரா, வேறு பிரச்னையா என்று வேறுபடுத்திப் பார்க்க முடியும்.

முதலில் மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின் பேரில் எண்டோஸ்கோப்பி சோதனையை மேற்கொண்டு, உங்களுக்கு இருப்பது அல்சர்தானா என்று உறுதிசெய்யுங்கள். அப்படி உறுதியானால் அமிலச் சுரப்பைக் குறைக்கும் ‘ஆசிட் சப்ரெஷன்’ மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். மருந்துகளைப் போலவே உங்களுடைய உணவுப்பழக்கமும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.

அல்சர்

காபி, டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். காரமான, புளிப்பான, மசாலா சேர்த்த உணவுகளையும் இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் எல்லாம் உணவுக்குழாயிலுள்ள sphincter எனப்படும் சுருக்குத்தசையைத் தளர்த்தி, லூசாக்கிவிடும். அதனால் அமிலம் எதுக்களித்து வருவது அதிகரிக்கும்.

இவற்றோடு தினமும் நடைப்பயிற்சி, ஆக்டிவ்வான லைஃப்ஸ்டைல், போதிய தூக்கம் போன்றவையும் பின்பற்றப்படும் பட்சத்தில் வயிற்றுவலி மெள்ள மெள்ள குறையும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.