டெல்லி: முன்பதிவு செய்யப்பட்ட ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் கேன்சலேஷன் கட்டணத்துடன் சேர்த்து 5 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதாவது முதல் வகுப்பு ஏசியில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் உறுதி செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்யப்பட்டால் வழக்கமாக பிடிக்கப்படும் 240 ரூபாயுடன் 5 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து 252 ரூபாயாக வசூலிக்கப்படும்.
அதேபோல இரண்டாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட்டாக இருந்தால் 200 ரூபாயுடன் 5 சதவீத ஜிஎஸ்டி, மூன்றாம் வகுப்பு ஏசி கோச் டிக்கெட்டாக இருந்தால் 180 ரூபாயுடன் 5 சதவீத ஜிஎஸ்டி என சேர்த்து ரத்து கட்டணம் வசூலிக்கப்படும்.
அதேநேரத்தில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால் ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த ஜூன் மாதம் சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு ரத்துக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது.ஒன்றிய அரசின் இத்தகைய அறிவிப்பால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.