உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மூளைச்சாவு அடைந்த 1,548 பேரிடம் 9,257உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில்  இருதயம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நபரை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.  அவருடன்  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் சம்சத்  பேகம், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குனர் விமலா, நோடல் அலுவலர் ஆனந்தகுமார், நிலைய மருத்துவ அலுவலர்  பார்த்தசாரதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இம்மருத்துமனையில், 10வது நபராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு  இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.  இவர் கடந்த மாதம் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  கடந்த 17ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 30 வயதுடையவரின் இதயம் தானமாக அ பெறப்பட்டு செல்பவகுமாருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவர், தற்போது நன்கு குணமடைந்து வீடு திரும்ப உள்ளார்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றவர், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தமிழ்நாட்டில் தற்பொழுது 194 மருத்துவமனைகள் பதிவுரிமை பெற்றுள்ளன. இதில் 21அரசு மருத்துவமனைகள் மற்றும் 174 தனியார் மருத்துவமனைகளும்  அடக்கம். இந்த மருத்துவமனைகள், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில்,  126 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மூளைச்சாவு சான்றளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதுவரை 1,548 மூளைச்சாவு அடைந்த நபர்களிடமிருந்து 9,257 உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் இதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், கணையம், சிறுகுடல், கைகள் உள்ளிட்ட மனித உடலின் முக்கியமான உறுப்புகள் 5,642 ஆகும். இதைதவிர தோல், கருவிழி, இதய வால்வுகள், ரத்த நாளங்கள், எலும்புகள், முதுகு தண்டு மற்றும் டிஸ்க் திசு, வயிற்று மடல் ஆகியவைகளும் மாற்றப்படுகிறது.

  இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.